Monday, 10 February 2025

மார்க்சின் அரசியல் பொருள்முதல்வாதம்

 (லெனின் கட்டுரையின் அடிப்படையில் EMLS பயிலரங்கில் எடுக்கப்பட்ட வகுப்பின் விரிவாக்கம்)

https://www.youtube.com/watch?v=oQOliq6PyI0 

https://www.youtube.com/watch?v=Ifer5OectJ0&t=5068s

மார்க்சியப் பொருளாதார போதனை என்கிற பகுதியில் லெனின் மதிப்பு, உபரி மதிப்பு ஆகிய உட்தலைப்புகளில் விளக்குகிறார்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உற்பத்தி உறவுகளின் தோற்றம், வளர்ச்சி, நலிவு ஆகிய கட்டங்களை ஆராய்வதே மார்க்சிய அரசியல் பொருள்முதல்வாதத்தின்  உள்ளடக்கம் ஆகும். எந்த உற்பத்தி முறைக்கும் ஒரு தோற்றம் இருக்கிறது, அது தொடர்ந்து வளர்ச்சி பெறுகிறது இறுதியில் அதன் உள்முரண்பாடுகளால் நலிவடைகிறது. இந்த அடிப்படையிலேயே மார்க்சிய அரசியல் பொருளாதாரம் முதலாளித்துவத்தைப் பார்க்கிறது.

மதிப்பு

முதலாளித்துவ உற்பத்தி முறையில் சரக்கு உற்பத்தியே அடிப்படையாக இருக்கிறது, அதனால் சரக்கு பற்றி நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

சரக்கு என்பது எதேனும் மனிதத் தேவைகளை நிறைவு செய்கிற பொருள் ஆகும். மேலும் அது மற்றொரு பொருளுக்கு பரிவர்த்தனை செய்துக் கொள்ளக்கூடிய பொருளாகவும் இருக்க வேண்டும்.

சரக்குக்கு இரண்டு காரணிகள் இருக்கின்றன. ஒன்று பயன்மதிப்பு, மற்றொன்று பரிவர்த்தனை மதிப்பு.

மனிதத் தேவைகளை நிறைவு செய்வது பயன்மதிப்பு, ஒரு குறிப்பிட்ட அளவுள்ள பயன்பதிப்பு மற்றொரு குறிப்பிட்ட அளவுள்ள பயன்மதிப்புக்கு மாற்றிக் கொள்வது பரிவர்த்தனை மதிப்பு.

பயன்மதிப்பைக் கொண்டு ஒரு சரக்கை மற்றொரு சரக்குக்கு சமப்படுத்த முடியாது. 

சான்றுக்கு அரிசியையும் ஆடையையும் எடுத்துக் கொள்வோம்.

அரிசி என்பது உணவுத் தேவையை நிறைவு செய்கிறது, ஆடை என்பது உடுக்கும் தேவையை நிறைவு செய்கிறது.  இந்த இரண்டு வகையானத் தேவைகளைக் கொண்டு இரண்டு சரக்கையும் கணக்கிட முடியாது. பரிவர்த்தனை மதிப்பைக் கொண்டே ஒவ்வொரு சரக்கும் சமமாகப் பரிமாறப்படுகிறது.

பரிவர்த்தனை மதிப்பில் அப்படி என்ன பொதுத் தன்மை இருக்கிறது?

அந்தப் பொதுத் தன்மை என்பது அதில் அடங்கி இருக்கிற உழைப்பே ஆகும்.

ரூ.500/-க் கொண்டு ஒரு சட்டை வாங்க முடிகிறது, அதே போல ரூ.500/-க் கொண்டு 10 கிலோ அரிசி வாங்க முடிகிறது

இவை இரண்டும் சம மதிப்புடையதாக இருக்கிறது.  இந்த சம மதிப்பு பணத்தாளில் இருந்து கண்டிப்பாக அளவிட முடியாது. இரண்டு பொருளில் செலுத்தப்பட்ட உழைப்பின் சராசரி அளவைக் கொண்டே மதிப்பு அளவிடப்படுகிறது.

பணத்தால் ஒரு சரக்கின் மதிப்பை அறிந்து கொள்ள முடியாது, சரக்கின் மதிப்பு பணத்தால் வெளிப்படுத்த முடியும். உழைப்பைக் கொண்டுதான் மதிப்பு அளவிடப்படுகிறது.

இந்த உழைப்பின் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் மார்க்ஸ் கூறுகிற உழைப்பின் இரட்டைத்தை தன்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

சரக்கு உற்பத்தில் தொழிலாளி தமது இரண்டு வகையான உழைப்பைச் செலுத்துகிறார். உழைப்பில் இரண்டு தன்மைகள் அடங்கி இருப்பதாக மார்க்ஸ் கண்டு பிடித்தார்.

ஒன்று ஸ்தூலமான உழைப்பு (குறிப்பான உழைப்பு) மற்றொன்று ஸ்தூலமற்ற உழைப்பு (பொதுவான உழைப்பு).

வடிவத்தைப் படைக்கிற உழைப்பு ஸ்தூல உழைப்பு மற்றது ஸ்தூலமற்ற உழைப்பு. 

அதாவது, வடிவத்தைப் படைக்கிற உழைப்பு குறிப்பான உழைப்பு, மற்றது பொதுவான உழைப்பு.

சட்டைக்கான துணி நெய்யப்படுகிறது என்றால் அதில் செலுத்தப்பட்ட குறிப்பிட்ட உழைப்பு நெசவு. இது ஸ்தூலமான உழைப்பு.

அரசிக்காக நெல் விளைவிக்கப்படுகிறது என்றால் அதில் செலுத்தப்பட்ட குறிப்பிட்ட உழைப்பு உழவு. இதுவும் ஸ்தூலமான உழைப்பு.

இந்த இரண்டு சரக்கில் காணப்படும் நெசவு, உழவு என்கிற அடிப்படையில் சரக்குகள் மதிப்பிடப்படுவதில்லை.  இதில் அடங்கி உள்ள பொதுவான உழைப்பைக் கொண்டே அளவிடப்படுகிறது, அந்த உழைப்பு ஸ்தூலமற்ற உழைப்பு.

நெசவு செய்வதற்கான உழைப்பும் உழவு செய்வதற்கான உழைப்பும் வெவ்வேறானவை என்பது எடுத்த எடுப்பிலேயே தெரிகிறது. ஆனால் இரண்டுக்கும் பொதுவான உழைப்பு இருக்கிறது, அது ஸ்தூலமற்ற உழைப்பு.

உழைப்பை செலுத்தும் போது உழைப்பாளியின் சக்தி இழக்கப்படுகிறது.

உழைப்பை செலுத்தும் போது தசை, மூளை போன்றவை பயன்படுத்தப்படுகிறது. அப்போது அவை சோர்வு அடைகிறது. இந்த சோர்வை ஏற்படுத்தக்கூடிய சக்தியே ஸ்தூலமற்ற உழைப்பு என்று கூறப்படுகிறது.

ஸ்தூலமான உழைப்பு பயன்மதிப்பைப் படைக்கிறது, ஸ்தூலமற்ற உழைப்பு பரிவர்த்தனை மதிப்பைப் படைக்கிறது. அதாவது குறிப்பான உழைபபு பயன்பதிப்பைப் படைக்கிறது, பொதுவான உழைப்பு பரிவர்த்தனை மதிப்பைப் படைக்கிறது.

இந்தப் பரிவர்த்தனை மதிப்பைக் கொண்டே சரக்கின் மதிப்பு அளவிடப்படுகிறது.

ஒரு சட்டையின் மதிப்பு ரூ.500/- , பத்து கிலோ அரசியின் மதிப்பு ரூ.500/- என்று இரண்டு சரக்குகளில் அடங்கி உள்ள ஸ்தூலமற்ற உழைப்பைக் கொண்டே, அதாவது பொதுவான உழைப்பைக் கொண்டே மதிப்பு சமப்படுத்தப்படுகிறது.

லெனின் இங்கே மார்க்ஸ் எழுதிய “அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு” என்கிற நூலில் உள்ள பகுதியை மேற்கோளாகக் காட்டுகிறார்.

“மதிப்புகள் என்கிற முறையில், அனைத்து சரக்குகளுமே கெட்டியாக்கப்பட்ட உழைப்பு நேரத்தின் திட்டவட்டமான திரள்களே ஆகும்.”

மார்க்ஸ் சுருக்கமாக சூத்திரத்தைப் போல கூறியுள்ளார். லெனினும் “ஒவ்வொரு குறிப்பிட்ட சரக்கும், சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கைத்தான் பிரதிநித்துவப்படுத்துகிறது.” என்று சூத்திரம் போல் கூறியுள்ளார்.

சூத்திரம் போல் கூறியவற்றை மார்க்சும் லெனினும் தங்களது நூல்களில் விரிவாக விளக்கி உள்ளனர். அரசியல் பொருளாதாரம் பற்றி படிக்கிற போது விரிவாகப் படிக்கலாம். நேரம் கருதி சுருக்கமாகவே இங்கே பார்க்கப்படுகிறது.

உபரி மதிப்பு

பணமும் மூலதனமும் ஒன்றல்ல. பணத்துக்கும் மூலதனத்துக்கு உள்ள வேறுபாட்டை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். மூலதனம் பண வடிவத்தில் இருக்கிறது என்பதனால் அது பணம் என்று கூறப்படுவதில்லை மூலதனம் என்றே அழைக்கப்படுகிறது.

சரக்கு உற்பத்தியின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் பணம் மூலதனம் ஆகிறது.

சரக்குப் புழக்கத்தின் பொதுச் சூத்திரமும் மூலதனப் புழகத்தின் பொதுச் சூத்திரமும் வேறுபடுகிறது.

முதலில் சரக்குப் புழக்கத்தைப் பார்ப்போம்.

கூடுதலாக விளைவித்த சரக்கை விற்றுப் பணத்தைப் பெற்று அந்தப் பணத்தின் மூலம் தேவைப்படும் சரக்கு வாங்கப்படுவது சரக்குப் புழக்கம் என்று அழைக்கப்படுகிறது. பண்ட மாற்றில் இருந்து விரிவடைந்தது சரக்கு புழக்கம். இதில் சரக்கில் தொடங்கி பணத்தைப் பெற்று அந்தப் பணத்தின் மூலம் தேவைப்படுகிற சரக்கு வாங்கப்படுகிறது. அதாவது சரக்கில் தொடங்கி சரக்கில் முடிவடைகிறது. பணம் செலுத்தும் சாதனமாக செயல்படுகிறது.

இந்த சரக்குப் புழக்கத்தின் பொதுச் சூத்திரம் ச-ப-ச, அதாவது சரக்கு-பணம்-சரக்கு என்படும்.

சரக்கை விற்று பணம் பெற்று அந்தப் பணத்தைக் கொண்டு வேறு சரக்கு வாங்கப்படுகிறது.

அடுத்து மூலதனப் புழக்கத்தைப் பார்ப்போம்.

தொழில் தொடங்கும் போது முதலாளி தம்மிடம் உள்ள பணத்தை அதாவது மூலதனத்தை செலவழித்து சரக்கை உற்பத்தி செய்கிறார், உற்பத்தி செய்த சரக்கை பணத்துக்கு விற்கிறார். அதாவது மூலதனத்தைக் கொண்டு சரக்கை உற்பத்தி செய்கிறார், உற்பத்தி செய்த சரக்கை சந்தையில் விற்கிறார். விற்று பணம் பெறுகிறார்.

மூலதனப் புழக்கத்தில் பணத்தில் தொடங்கி இறுதியில் பணத்தில் முடிகிறது. இங்கே சரக்கு விற்பனைக்காக உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த மூலதனப் புழக்கத்தின் பொதுச் சூத்திரம் ப-ச-ப, அதாவது பணம்-சரக்கு-பணம் ஆகும்.

பணத்தை முதலில் செலவழித்து, சரக்கு உற்பத்தி செய்யப்பட்டு, அந்த சரக்கு விற்று பணம் பெறப்படுகிறது.

சரக்குப் புழக்கத்தில் கூடுதலாக எதுவும் கிடைப்பதில்லை, ஆனால் மூலதனப் புழக்கத்தில் கூடுதலாக பணம் கிடைக்கிறது.

சரக்கு புழக்கத்தில் பணம் இடைச் சாதனமாக செயல்படுகிறது.

மூலதனப் புழக்கத்தில் செலவிட்டப் பணம் கூடுதல் பணத்தைப் படைக்கிறது.

ஒரு முதலாளி சரக்கு உற்பத்தில் செலுத்திய பணத்தைவிட விற்பனை செய்யும் போது கூடுதலாக பணத்தைப் பெறுகிறார்.

இதற்கான சூத்திரத்தை மார்க்ஸ் இவ்வாறு சுட்டுகிறார். ப-ச-ப,. அதாவது பணம் –சரக்கு- கூடுதல் பணம். இந்த கூடுதல் பணம், பணத்தின் “பெருக்கம்” என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பெருக்கம்தான் மூலதனமாக தொடர்கிறது.

பணம் கூடுதல் பணத்தைப் பெற்றுத்தருகிறது என்றால் அந்தப் பணம் மூலதனம் ஆகும். ஆதாவது கூடுதல் பணத்தைப் பெற்றுதருகிற பணமே மூலதனம் ஆகும்.

இதன் விரிந்த விளக்கத்தை அரசியல் பொருளாதார நூல்களிலும் வகுப்புகளிலும் பார்க்கலாம்.

தொழிலாளி முதலாளிக்கு விற்பது உழைப்பை அல்ல உழைப்புச் சக்தியை என்று மார்க்ஸ் விளக்குகிறார். பணம் எப்படி ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் மூலதனம் ஆகிறதோ, அதே போல உழைப்பு என்பது குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் உழைப்புச் சக்தி ஆகிறது.

இதனை லெனின் சொற்களிலேயே பார்ப்போம்.

 

"மூலதனத்தின் தோற்றத்திற்கு வரலாற்று வழிப்பட்ட முன்தேவைகளாவன: முதலாவதாக, தனிநபர்களின் கையிலே ஒரு குறிப்பிட்ட அளவுக்குப் பணம் குவியவும், அதே சமயத் தில் பொதுவாகவே சரக்கு உற்பத்தியின் வளர்ச்சி சார்பு நோக்கில் உயர்ந்த தரத்திற்கு வளர்ந்திருக்கவும் வேண்டும்; இரண்டாவதாக, இரண்டு பொருளில் "சுதந்திரமான உழைப்பாளி இருக்க வேண்டும்அதாவது,தனது உழைப்புச் சக்தியை விற்பதில் எல்லா விதமான கட்டுப்பாடுகளில் இருந்தும் தடைகளில் இருந்தும் விடுபட்டவன் என்ற பொருளிலும், நிலத்திலிருந்தும் பொதுவாக எல்லா உற்பத்திச் சாதனங்களில் இருந்தும் விடுபட்டவன் என்ற பொருளிலும். யாருடனோ எதனுடனோ இணைக்கப்படாத கட்டறுந்த உழைப்பாளி, அதாவது தனது உழைப்புச் சக்தியை விற்பதைத் தவிர வேறெந்த வழியிலும் பிழைக்க முடியாத "பாட் டாளி" இருக்க வேண்டும்."

(காரல் மார்க்ஸ்)

சரக்கு உற்பத்தியின் வளர்ச்சிக் கட்டத்தில் உழைப்பு, உழைப்பு சக்தி ஆகிறது. அப்போது, உழைப்புச் சக்தி ஒரு சரக்காகக் கொள்ளப்படுகிறது.

தொழிலாளி முதலாளிக்கு விற்பது உழைப்பை அல்ல உழைப்புச் சக்தி என்பதை சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.

உழைப்புச் சக்தியின் மதிப்பும், உழைப்பின் மதிப்பும் வேறுபடுகிறது. இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றல் உழைப்புச் சக்தியின் மதிப்பை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

உழைப்புச் சக்தியின் மதிப்பைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் உழைப்புச் சக்தியின் விலை என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து, உழைப்புச் சக்தி என்னும் சரக்கின் விலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை பார்ப்போம்.

உழைப்புச் சக்தி என்னும் சரக்கை உற்பத்தி செய்வதற்கு தேவையானதின் பண அளவே உழைப்புச் சக்தியின் விலை ஆகும்.

ஒரு பொருளின் விலை என்பது அந்தப் பொருளை உற்பத்தி செய்யும்போது செலவிடப்பட்ட பணத்தைக் கொண்டு அளவிடப்படுகிறது, அதே போலத்தான் உழைப்புச் சக்தியின் விலையும் அளவிடப்படவேண்டும்.

உழைப்பாளர் உற்பத்தியில் ஈடுபடும்போது தம் உழைப்புச் சக்தியை இழக்கிறார். இதனை மறுவுற்பத்தி செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாது உற்பத்திக்கு தொடர்ந்து உழைப்பாளர்கள் கிடைப்பதற்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும், அதற்கான குடும்பத்தைப் பராமரிக்க வேண்டும். இதற்கு ஆகும் குறைந்தபட்ச பணமே உழைப்புச் சக்தியின் விலையாகக் கொள்ளப்படுகிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறையில் தொழிலாளிக்கு, அவர் உழைத்த முழு நேரத்துக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை, உழைப்புச் சக்திக்கே சம்பளம் கொடுக்கப்படுகிறது.

இதனை சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.

எளிமைக் கருதி நாம் ஒரு நாள் சம்பளத்தை எடுத்துக் கொள்வோம்.

ஒரு தொழிலாளிக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.1000/-. ஒவ்வொரு நாளும் தொழிலாளி தொழிற்சாலையில் உழைக்கத் தொடங்கிய முதல் ஒரு மணிநேரத்திலேயே ரூ.1000/- மதிப்புக்கான உழைப்பைச் செலுத்திவிடுகிறார். ஆனால் தொழிலாளி ஒவ்வொரு நாளும் 8 மணி நேரம் உழைக்க வேண்டியதாகிறது. கூடுதலாக 7 மணி நேரம் உழைக்க வேண்டி வருகிறது.

இந்த கூடுதல் நேரத்தின் உழைப்பில் இருந்து கிடைக்கும் மதிப்பே, உபரி மதிப்பு என்று மார்க்ஸ் கூறுகிறார். இந்தக் கூடுதல் மதிப்பில் இருந்தே முதலாளிக்கு லாபம் கிடைக்கிறது. இந்த லாபத்துக்காகவே முதலாளி தொழிற்சாலையை நடத்துகிறார்.

உபரி மதிப்பை லெனின் சூத்திரம் போல விளக்குவதை அவரது சொற்களிலேயே பார்ப்போம்.

 

“கூலி பெறும் உழைப்பாளி நிலம், ஆலைகள், உழைப்புக் கருவிகள் ஆகிவவற்றின் சொந்தக்காரர்களிடம் தனது உழைப்புச் சக்தியை விற்கிறான். தொழிலாளி வேலை நாளின் ஒரு பகுதியைத் தன்னையும் தனது குடும்பத்தையும் பராமரித்துக் கொள்வதற்கு வேண்டிய செலவுக்காக (அதாவது, கூலிக்காக) உழைப்பதில் கழிக்கிறான். மறு பகுதியில் ஊதியமின்றியே உழைத்து முதலாளிக்கு உபரி மதிப்பை உண்டாக்கித் தருகிறான். இந்த உபரி மதிப்புத் தான் லாபத்துக்குத் தோற்றுவாய், அதுதான் முதலாளி வர்க்கத்தின் செல்வத்துக்குத் தோற்றுவாய்.”

(மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)

இந்த லாபத்துக்காக உழைப்பாளியின் உழைப்பு நேரத்தைக் கூட்டுவதுபற்றிய சிந்தனையிலேயே முதலாளி இருக்கிறார். மேலும் ஒவ்வொரு முதலாளிக்கும் போட்டி முதலாளிகள் இருக்கிறார். போட்டி முதலாளியை விட அதிகம் லாபம் கிடைக்க வேண்டும் என்றால் தம்மிடம் உள்ள உழைப்பாளியை அதிக நேரம் உழைக்க வைக்க வேண்டும்.

உபரி மதிப்பு இரண்டு முறைகளில் பெறப்படுகிறது. 1.அறுதி உபரி மதிப்பு, 2.ஒப்பீட்டு உபரி மதிப்பு.

வேலை நேரத்தை அதிகப்படுத்துவதின் மூலம் கிடைப்பது அறுதி உபரி மதிப்பு. அவசியமான வேலை நேரத்தைக் குறைப்பதின் மூலம் கிடைப்பது ஒப்பீட்டு உபரி மதிப்பு.

தொழிலாளி, உழைப்புச் சக்திக்கு உழைக்கும் நேரமே அவசியமான உழைப்பு நேரம் ஆகும்.

அவசியமான உழைப்பு நேரத்தைக் குறைக்க மூன்று வழி இருக்கிறது. 1.கூட்டுழைப்பு, 2.உழைப்புப் பிரிவினை, 3.புதிய இயந்திரத்தை பயன்படுத்துதல்.

 

அறுதி உபரி மதிப்பு, ஒப்பீட்டு உபரி மதிப்பு என்பதை மூல நூல்களிலும் அரசியல் பொருளாதார வகுப்புகளிலும் பார்க்கலாம்.

உபரி மதிப்பை அதிகரிக்கும் நோக்கில் முதலாளி தொழிலாளியை சுரண்டுகிறார். தொழிலாளி இதனை எதிர்க்கிறார்.

முதலாளியின் வர்க்க நலனும் தொழிலாளின் வர்க்க நலனும் மோதுகின்றன.

முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் இந்த முரணே முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையிலான வர்க்கப் போராட்டமாக உருவாகிறது.

வர்க்கப் போராட்டம் என்பது யாருடைய சொந்த சிந்தனையிலல் தோன்றியது கிடையாது, அது முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் முரணில் அடங்கி இருக்கிறது. அந்த முரண் சிந்தனையில் பிரதிபலிக்கிறது. அதாவது, புறநிலையில் இருப்பதே அகநிலையாக சிந்தனையில் வெளிப்படுகிறது.

இதனை தீர்ப்பதற்கு வழி வர்க்கப் போராட்டமே ஆகும்.

ஏன் வர்க்கப் போராட்டம், சமூக மாற்றம் என்று கூறப்படுகிறது என்றால், முதலாளித்து உற்பத்தி முறையில் காணப்படும் முரணை, முதலாளித்துவ உற்பத்தி முறைக்குள் தீர்வு காண முடியாது. இந்த முரணுக்குத் தீர்வாக முதலாளித்துவ உற்பத்தி முறையை விழ்த்தி அதனிடத்தில் சோஷலிச உற்பத்தி முறையைக் கொண்டுவர வேண்டும். இதைத் தவிர்த்த  வேறு தீர்வு கிடையாது. 

தனிச் சொத்துடைமையின் அடிப்படையில் முதலாளித்துவ உற்பத்தியாக, கூலி அமைப்பு முறை செயல்படுகிறது, கூலி அமைப்பு முறைக்குள் கூலிப் பிரச்சினை முழுயாகத் தீர்க்க முடியாது. தனிச் சொத்தை பொதுச் சொத்தாக்கப்படும் போதே கூலிப் பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படுகிறது.

இதனை சாதிக்க வேண்டும் என்றால் வர்க்கப் போராட்டத்தை நடத்தியே ஆக வேண்டும்.

Friday, 17 March 2023

2) பொருளாதார நெருக்கடிகள் - தி.கே.மித்தேராபோல்ஸ்கி

19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, அதாவது பெருவீத இயந்திரத் தொழில்கள் நிலைக்க ஆரம்பித்ததிலிருந்து, முதலாளித்துவ நாடுகளின் பொருளாதாரம் அவ்வப்போது பொருளாதார நெருக்கடிகளால் உலுக்கப்பட்டு வருகிறது. 1825- இல் நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாகப் பாதித்த முதல் பொருளாதார நெருக்கடி இங்கிலாந்தில் ஏற்பட்டது. 1836-இல் மற்றொரு புதிய நெருக்கடி இங்கிலாந்தை உலுக்கியது; அது அமெரிக்காவுக்கும் பரவியது. 1845-48-இல் ஏற்பட்ட அடுத்த நெருக்கடி உலக நெருக்கடியாக இருந்தது. அதைத் தொடர்ந்து 1856, 1857, 1873, 1882, 1890 ஆகிய ஆண்டுகளிலும் நெருக்கடிகள் ஏற்பட்டன. இருபதாம் நூற்றாண்டில் 1900-03: 1907; 1920-21; 1929–33; 1937-38 ஆகிய வருடங்களில் நெருக்கடிகள் ஏற்பட்டன. உதாரணமாக, இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பின்னர், அமெரிக்காவில் (1948-49; 1953-54; 1957-58; 1960 -61) நான்கு நெருக்கடிகள் ஏற்பட்டன. 1957-58-ஆம் வருடத்திய நெருக்கடி யானது முதலாளித்துவ உலகின் இயந்திரத் தொழில் உற்பத்தியில் அநேகமாக மூன்றில் இரண்டு பாகத்தைக்கொண்டிருந்த நாடுகளைப் பாதித்ததாக இருந்தது. 

முதலாளித்துவத்தின் கீழ்ப் பொருளாதார நெருக்கடிகள் என்பவை அமித உற்பத்தி (over production) நெருக்கடிகளாகும். ஒரு நெருக்கடியின் போது சரக்குகள் விற்பனையாகாமல் தேக்கமடைகின்றன. ஏனென்றால், ஒரு எல்லைக் குட்பட்ட (வரையறுக்கப்பட்ட வாங்கும் சக்தியை உடைய உபயோகிப் பாளர்களால் வாங்கக் கூடியதைக் காட்டிலும் அதிகமான சரக்குகள் உற்பத்தி செய்யப்பட்டுவிட்டன. உற்பத்தி அமிதமாக ஏற்பட்டுள்ளது என்பதால் சமூகத்தின் அங்கத்தினர் அனைவருடைய தேவைகளையும் திருப்தி செய்துவிட்டது என்பதல்ல, அதற்குமாறாக, நெருக்கடி சமயத்தில் தொழிலாளி மக்கள் மிகவும் கஷ்ட நிலைமையை அனுபவிக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கைத் தரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. வேலையில்லாத் திண்டாட்டத்தின் விளைவாக மிகப் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை வசதிகள் அனைத்தும் பறிக்கப்படுகின்றன. சரக்குகள் உபரியாக இருப்பது சமூகத்தின் உண்மையான தேவைகளுடன் சம்பந்தப் பட்டதாக இல்லை. இந்த சரக்குகளை வாங்கும் சக்தி மக்களுக்கு இல்லை என்பதையே இது குறிக்கிறது. எனவே, நெருக்கடியின்போது அமித உற்பத்தி என்பது பெயரளவுக்குத் தான் (இதற்குமுன் இருந்த நிலைமையுடன் ஒப்பிட்டுக் கூறுவது மட்டுந்தான்).

அமித உற்பத்தி (over production) என்பதன் விளைவாக ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளானவை உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும், உற்பத்தியின் பலனை அபகரித்துக் கொள்வதில் உள்ள தனியார் முதலாளித்துவ உருவத்திற்கும் இடையிலுள்ள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. லட்சோப லட்சக்கணக்கான மக்கள் முதலாளித்துவத் தொழில் நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள். ஆனால் அவர்கள் உற்பத்தி செய்வதெல்லாம் தொழில் நிலையங்களின் உடைமையாளர்களுக்குச் சொந்தமாகிறது. ஒரு தொழிலாளி எவ்வளவுதான் உற்பத்தி செய்தாலும், அவனுடைய கூலி அவனை எவ்வளவு வாங்குவதற்கு சாத்திய மாக்குகிறதோ அந்த அளவுக்குத்தான் அவன் வாங்க முடியும்.

அதிகபட்ச லாபம் பெறும் முயற்சியில் முதலாளிகள் உற்பத்தியை விரிவுபடுத்துகிறார்கள். தொழில்நுட்பத்தைச் செம்மைப் படுத்துகிறார்கள். மிகப் பெரும் அளவு சரக்குகளை விற்பனைக்காகச் சந்தைக்குக் கொண்டு வருகிறார்கள். ஆனால் தொழிலாளிகளின் கூலி உயர்வு, அது ஒருக்கால் உயர்வதானாலும் கூட, உற்பத்தியின் வளர்ச்சிக்குப் பின்தங்கியே நிற்கிறது. இதன் பொருள், தொழிலாளி வர்க்கத்தின், உழைப்பாளி மக்களின் பரந்த பகுதியினரது உண்மையான கோரிக்கை அத்துடன் ஒப்பு நோக்கும்போது குறைகிறது. முதலாளித்துவ உற்பத்தி விரிவுபடுவதானது, பெருவாரியான பிரதான மக்கள் பகுதியின் எல்லைக் குட்பட்ட உபயோகிக்கும் சக்தியினால் தவிர்க்க முடியாமல் தடைப்படுத்தப்படுகிறது.

முதலாளித்துவத்தின் பிரதான முரண்பாடு பூர்ஷுவா வர்க்கத்திற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் இடையிலான வர்க்க முரண்பாடுகளாக வெளித்தோன்றுகிறது. உற்பத்தியின் இரு மிக முக்கிய நிலைமைகளுக்கிடையில் முதலாளிகளின் கையில் குவிந்திருப்பதற்கும் நேரிடையான உற்பத்திச் சாதனங்கள் உற்பத்தியாளர்களிடமிருந்து உற்பத்தி சாதனங்கள் பறிக்கப் பட்டு, அவர்கள் தமது உழைப்புச் சக்தியை மட்டுமே உடைமையாகப் பெற்றிருப்பதற்கும் இருக்கும் முரண்பாடு ஒரு புறத்தில், அளவுக்கு மீறிய உற்பத்திச் சாதனங்களும், உற்பத்திப் பொருள்களும் மறுபுறத்தில், வாழ்க்கை வசதிகள் பறிக்கப்பட்ட வேலையில்லாதோர் கூட்டம், அளவுக்கு மீறிய உழைப்புச் சக்தியும் என அமித உற்பத்தியும் என்னும் நெருக்கடியில் குறிப்பாக, தெளிவாகத் தோற்றமளிக்கிறது.

தொழிலாளி வர்க்கத்திற்கும் பூர்ஷுவா வர்க்கத்திற்கும் விவசாயிகளுக்கும் அவர்களைச் சுரண்டுகிற நிலச் சொந்தக்காரர்களுக்கும் இடையிலான வர்க்க முரண்பாடுகளை நெருக்கடிகள் அதிகப்படுத்துகின்றன. முதலாளித்துவ சமுதாயத்தில் வர்க்கப் போராட்டம் தீவிரமடைகிறது. இந்தப் போராட்டத்தில் உழைப்பாளி மக்களின் பரந்த பகுதியினர் பங்கெடுத்துக் கொள்ளுகிறார்கள்.

நெருக்கடியானது, முதலாளித்துவ உற்பத்தி முறையின் தவிர்க்க முடியாத உடன்பிறப்பாகும். இயற்கையான விளைவாகும். முதலாளித்துவம் இருக்கிறவரையில் அவை ஏற்படாமற் செய்ய முடியாது. முதலாளித்துவத்தினால் படைக்கப்பட்ட உற்பத்திச் சக்திகள் பூர்ஷுவா உற்பத்தி உறவுகளின் எல்லைவட்டத்தை மீறி வளர்ந்துவிட்டன என்பதையும், அதன் விளைவாகப் பிந்தியது (உற்பத்தி உறவுகள்) உற்பத்திச் சக்திகள் மேலும் வளர்வதற்கு தடையாகிவிட்டன என்பதையும் அவை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன. இந்த வளர்ச்சியை உத்தரவாதம் செய்ய உற்பத்திச் சாதனங்கள் மீதான முதலாளித்துவ தனியுடைமையையும், முதலாளித்துவ உற்பத்தி உறவுகளையும் ஒழித்துக் கட்டுவது அவசியமாகும்.

உற்பத்திச் சக்திகளை வளர்த்து, உற்பத்தியை சமூகமயமாக்கியதன் மூலம் முதலாளித்துவமானது, சோஷலிஸத்திற்கான பௌதிக முன் தேவைகளை எதார்த்தத்தில் சிருஷ்டித்து விடுகிறது. அதேசமயத்தில் சமுதாயத்தை மாற்றியமைக்கப்போகும் சக்தியையும் அது தோற்றுவிக்கிறது. இந்த சக்திதான் தொழிலாளி வர்க்கம்.

1) முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடு - தி.கே.மித்தேராபோல்ஸ்கி

 IV முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் 

1) முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடு

முதலாளித்துவம் வளர்ச்சி அடைய அடைய உழைப்பின் சமூகப் பிரிவினை அதிகரிக்கிறது. முன்னர் தனித்தனியாக சுயேச்சையாக இருந்த இயந்திரத் தொழில் பிரிவுகளுக்கிடையில் பரஸ்பரத் தொடர்புகளும், ஒன்றையொன்று சார்ந்திருப்பதும் ஸ்திரப்படுகிறது. பல்வேறு தொழில் நிலையங்கள், பிரதேசங்கள், நாடுகள் ஆகியவற்றுக்குப் பொருளாதார உறவுகள் பெருமளவு அதிகரித்துள்ளன. முதலாளித்துவ அமைப்பானது, இன்னும் முதலாளித்துவ உறவுகள் ஏற்படாத காலனி நாடுகள் அடங்கலாக முழுக்கண்டங்களைத் தழுவி நிற்கிறது.

தொழில் துறையிலும், விவசாயத்திலும் பெருவீத உற்பத்தி ஏற்படுத்தப்படுகிறது. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியுடன், நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான தொழிலாளிகளுடைய ஒன்றுபட்ட உழைப்பை அவசியப்படுத்துகிற உற்பத்திக் கருவிகளும், உற்பத்தி வழிமுறைகளும் அமுலுக்கு வருகின்றன. உற்பத்தி மென்மேலும் அதிகமாக சமூகத் தன்மையைப் பெறுகிறது. ஆனால் உற்பத்தி சாதனங்கள் தனி உடைமையாக இருப்பதன் விளைவாக லட்சக்கணக்கான மக்களின் சமூக உழைப்பின் உற்பத்திப் பொருளை முதலாளிகளின் ஒரு சிறு கூட்டம் அபகரிப்பதில் முடிகிறது.

முதலாளித்துவ அமைப்பு ஆழமான முரண்பாட்டைக் கொண்டுள்ளது. உற்பத்தி மேலும் மேலும் அதிகமாக சமூகத் தன்மையைப் பெறுகிறது. அதேசமயத்தில் உற்பத்திச் சாதனங்களின் உடைமை தனிப்பட்ட முதலாளிகளின் கைகளிலேயே இருக்கிறது. இது உற்பத்தியின் சமூகத் தன்மைக்குப் பொருந்தாதது. உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும், உற்பத்தியின் பலன்களைத் தனிப்பட்ட முதலாளித்துவ முறையில் அபகரித்துக் கொள்வதற்கும் இடையில் உள்ள முரண்பாடுதான் முதலாளித்துவத்தின் அடிப்படையான முரண்பாடு ஆகும்.

முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடானது. இடையறாது வளர்ந்து கொண்டேயிருக்கும். உற்பத்திச் சக்திகளுக்கும், முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுக்கு மிடையிலான முரண்பாடாகப் பிரதிபலிக்கிறது.

அமித உற்பத்தி (over production) என்னும் பொருளாதார நெருக்கடியின் போது இந்த முரண்பாடு, குறிப்பாகவும் தெளிவாகவும் வெளியாகிறது.

Thursday, 16 March 2023

1) பூர்ஷுவா வர்க்கமும் தொழிலாளி வர்க்கமும்

 III முதலாளித்துவ சமுதாயத்தின் வர்க்க சேர்க்கை 

1) பூர்ஷுவா வர்க்கமும் தொழிலாளி வர்க்கமும்

ஒவ்வொரு வர்க்க சமுதாயமும் வெவ்வேறான வர்க்கங்களையும், பகுதிகளையும் பெற்றிருக்கிறது. ஆனால் தமக்கு இடைப்பட்ட உறவுகளில் சமுதாயத்தின் பிரதான முரண்பாட்டை வெளிக்காட்டுகிற பிரதான வர்க்கங்கள் இவற்றில் எப்போதும் உட்படும். அடிமை உடைமை சமுதாயத்தில் இந்த வர்க்கங்கள் அடிமை உடைமையாளர்களும், அடிமைகளும் ஆவார்கள். நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் அவர்கள் நில உடைமையாளர்களும் பண்ணையடிமைகளும் ஆவார்கள். முதலாளித்துவ சமுதாயத்தில் பிரதான வர்க்கங்கள் பூர்ஷுவா வர்க்கமும் தொழிலாளி வர்க்கமும் (புராலிடேரியட் - Proletarian) ஆகும்.

பூர்ஷ்வாக்கள், உற்பத்தி சாதனங்களைச் சொந்தமாக வைத்துக் கொண்டு கூலித் தொழிலாளிகளைச் சுரண்டுவதற்காக அவற்றைப் பயன் படுத்தும் வர்க்கமாகும். பூர்ஷ்வா வர்க்கம் ஒரே தன்மையானது அல்ல. இன்று முதலாளித்துவ வர்க்கத்தின் மேல்தட்டில் உள்ள கூட்டம், முதலாளித்துவ உலகின் அரசியலிலும், பொருளாதாரத்திலும் ஆதிக்கம் வகிக்கும் ஏகபோக பூர்ஷுவாக்களாகும். இங்ஙனம் அனைத்து முதலாளித்துவ நாடுகளினது உற்பத்தியில் மூன்றில் ஒரு பாகம் 200 ஏகபோகங்களின் ஆதிக்கத்திலிருக்கிறது. குட்டி பூர்ஷுவாக்கள் என்போர் முதலாளி வர்க்கத்திற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். சிறு தொழில் நிறுவனங்களின் சொந்தக்காரர்களில் கணிசமான கம்பெனிகளைச் சார்ந்திருக்கிறார்கள்.

சென்ற காலங்களில் நகர்ப்புற குட்டி பூர்ஷுவாக்கள், தொழிலாளி வர்க்கத்தைவிட மேலான வாழ்க்கைத் தரத்தை அனுபவித்து வந்தார்கள். இன்று மிகப் பெரும்பாலான குட்டி பூர்ஷ்வாக்களின் வருமானம் பெரும் தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் கூலித் தொழிலாளிகளைவிட அதிகமல்ல; பல இடங்களில் பெரும் தொழில் நிலையங்களில் வேலை செய்யும் தொழிலாளிகளின் சம்பளங்களைவிடவும் குறைவாகும். மறுபுறத்தில், சிறு தொழில் நிறுவனங்களது சொந்தக்காரனின் வேலை நிலைமைகள், தொழிலாளிகளின் வேலை நிலைமைகளைவிட மோசமானது, ஏனென்றால் அவனுடைய வேலை நாள் நீண்டதாக இருக்கிறது. தமது விடாப்பிடியான, தொடர்ந்த போராட்டங்கள் மூலம் தொழிலாளிகள் வென்றுள்ள சமூக அனுகூலங்கள் குட்டி பூர்ஷுவாக்களுக்கு இல்லை. மேலும் சிறிய உற்பத்தியாளன் பெரும் கம்பெனிகளைச் சார்ந்திருக்கிறான். குட்டிபூர்ஷ்வாக்கள் பிரதானமாக தமது சுயேச்சையை இழந்து விட்டார்கள்.

உற்பத்தி சாதனங்களும் வாழ்க்கை சாதனங்களும் பறிக்கப்பட்ட கூலித் தொழிலாளிகளின் வர்க்கம்தான் புராலிடேரியட் (Proletarian) எனப்படுவது. எனவே இந்த வர்க்கம் முதலாளிகளுக்குத் தனது உழைப்புச் சக்தியை விற்கும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறது.

முதலாளித்துவ சமுதாயத்தில், பூர்ஷ்வா வர்க்கம் கூலித் தொழிலாளிகளைச் சுரண்டாமல் நிலைத்திருக்கவோ மேலும் செல்வந்தர்களாகவும் முடியாதாகையாலும், அதே போல் புராலிடேரியன்கள் தங்களை முதலாளிக்கு வாடகைக்குக் கொடுக்காமலும், தங்களுடைய உழைப்புச்சக்தியை விற்காமலும் வாழ முடியாதாகையாலும், பூர்ஷ்வா வர்க்கமும், புராலிடேரியட்டும் பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளன. அதே சமயத்தில் பூர்ஷுவா வர்க்கமும் தொழிலாளி வர்க்கமும் ஒன்றுக்கொன்று விரோதமான வர்க்கங்களாகும். அவர்களுடைய நலன்கள் சமரசம் செய்யப்பட முடியாதவை. பூர்ஷ்வா வர்க்கத்திற்கும், தொழிலாளி வர்க்கத்திற்கும் இடையிலான முரண்பாடுகள்தாம், முதலாளித்துவ சமுதாயத்தின் பிரதான முரண்பாடு ஆகிறது.

 

7) மூலதனம் - தி.கே.மித்தேராபோல்ஸ்கி

முதலாளித்துவ சமுதாயத்தைப் பற்றி நாம் ஆராயும் போது முதலில் மூலதனம் என்ற கருத்து நம்முன் நிற்கிறது. 

மூலதனம் என்றால் என்ன? இந்த சொல்லின் உள்ளடக்கம் என்ன?

மூலதனத்தின் திட்டவட்டமான வெளித் தோற்றங்கள் பல உள. எந்த முதலாளித்துவ நாட்டிலும் பணம், இயந்திரங்கள், கட்டடங்கள், தயாராகவுள்ள பொருள்கள் முதலியன எதுவும் மூலதனமாக இருக்க முடியும். எனவே இதிலிருந்து மூலதனம் என்றால் மதிப்பு என்ற முதல் முடிவிற்கு வரமுடியும். ஒரு தொழிலாளியினுடைய கூலி பணமாகக் கொடுக்கப்படுகிறது. ஆனால் இதற்குத் தொழிலாளி மூலதனத்தைப் பெற்றிருக்கிறான் என்று அர்த்தமல்ல. ஒரு விவசாயி ஒரு வீட்டையும், விவசாயக் கருவிகளையும் பெற்றிருக்கிறான். ஆனால் இந்த சொத்தும் மூலதனமல்ல. மற்றெல்லா மதிப்பையும் போல, பணம், அது தன்னுடைய மதிப்பை அதிகரிக்கிறபோதுதான் அதாவது அது உபரி மதிப்பை உண்டாக்குகிறபோதுதான் மூலதனமாகிறது. எனவே, உபரி மதிப்பை உண்டாக்குகிற மதிப்புத்தான் மூலதனம் என்று விளக்கி நாம் நமது முதல் முடிவை விரிவுபடுத்தலாம்.

லாபமானது மூலதனத்தின் பிரிக்க முடியாத, அதனுள்ளேயே இருக்கிற தன்மை என்று பூர்ஷுவா விஞ்ஞானம் வலியுறுத்துகிறது. எனினும் மூலதனம் தானாகவே உபரி மதிப்பை உண்டாக்க முடியாது. மூலதனம் அது உழைப்புடன் ஒன்றுபடுகிற - சேருகிற - போதுதான், அதாவது உற்பத்தி செயல்முறைப் போக்கில்தான் அதன் மதிப்பை அதிகரிக்கிறது. மூலதனம் தொழிலாளியைச் சுரண்டுகிறது. அத்தொழிலாளி தன்னுடைய உழைப்பால் உபரி மதிப்பை உண்டாக்குகிறான்; அந்த உபரி மதிப்பு மூலதனத்தை அதிகரிக்கிறது. இதிலிருந்து, மூலதனம் என்பது கூலி வேலைத் தொழிலாளிகளைச் சுரண்டுவதன் மூலம் உபரி மதிப்பை உண்டாக்குகிற மதிப்பு என்றாகிறது.

அதனுடைய ஸ்தூலமான உருவம் எதுவானாலும் மூலதனம் என்பது வெறும் ஒரு பொருள் மட்டும் அல்ல. முதலாளி வர்க்கத்திற்கும் கூலி வேலைத் தொழிலாளர் வர்க்கத்திற்கும் இடையே ஒரு குறிப்பிட்ட உற்பத்தி உறவுகளை மூலதனம் தன்னுட் கொண்டிருக்கிறது. இந்த உறவுகள், மனிதனை மனிதன் சுரண்டுவதில் வெளியாகிறது.

மூலதனத்தைப் பற்றி விளக்குகையில், பூர்ஷுவா பொருளாதார விதிகள், வழக்கமாக உற்பத்திச் சாதனங்கள் எனப் பொருள்படும்படி அதைக் குறிப்பிடுகிறார்கள். பண்டைய ஆங்கிலேய பூர்ஷுவா அரசியல் பொருளாதாரத்தின் பிரதிநிதிகளான ஆடம் ஸ்மித்தும், டேவிட் ரிக்கார்டோவும் இந்தக் கண்ணோட்டம் கொண்டிருந்தனர். உதாரணமாக, ரிகார்டோ கல்லையும், தடியையும் அதாவது புராதன மனிதனின் புராதனக் கருவிகளை, மூலதனமாகக் கருதினார். பூர்ஷுவா விஞ்ஞானம் இன்னமும் மூலதனத்தை, உற்பத்தி சாதனமாக, மூலதனமும் உற்பத்திக்கருவிகளும் ஒன்றெனக் கூறுகிறது. அது மூலதனம் என்பது எந்த உற்பத்தியிலும் நிரந்தரமான, சாசுவதமான, இயற்கையான நிலைமை என எடுத்துக்காட்ட முயற்சிக்கிறது. புராதன சமுதாயத்தில் மூலதனக் “கண்டுபிடிப்பு” இந்த நோக்கத்தைத்தான் நிறைவேற்றுகிறது. மூலதனம் ‘சாசுவதமாக இருந்தது என்ற கோட்பாடு" முதலாளித்துவம் காலகாலத்திலும் இருந்தது என்ற கோட்பாட்டை” உறுதிப்படுத்துவதாகக் கருதப்பட்டது.

பூர்ஷுவா பொருளாதாரவாதிகள், முதலாளித்துவத்தினது - தோற்றத்தின் சரித்திரத்தையும் முதலாளித்துவ சமுதாயத்தில் வர்க்கங்கள் உருவாவதைப் பற்றியும் தவறாக எடுத்துக் காட்டுகிறார்கள். கஷ்டப்பட்டு வேலைசெய்து சிக்கனமாக இருந்தவர்கள் முதலாளிகள் ஆனார்கள் என்றும் தங்கள் சொத்தையெல்லாம் ஊதாரித்தனமாக செலவிட்ட சோம்பேறிகள் தொழிலாளிகள் ஆனார்கள் என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள். இந்தக் கட்டுக் கதைகளுக்கும் வரலாற்று ரீதியான உண்மைக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. ஆரம்ப மூலதனக் குவியல் சிக்கனத்தால் ஏற்பட்டதல்ல; ஆனால் காலனி நாடுகளைக் கொள்ளையடித்ததன் மூலமாகவும் பலவந்தமாக விவசாயிகளை ஓட்டாண்டியாக்கியதன் மூலமும், முதலாளித்துவ உழைப்புக் கட்டுப்பாட்டை உண்டாக்கும் நோக்கத்துடன், ஏழைகளுக்கெதிராக கெடுபிடியான கட்டங்களை அமுலாக்கியதன் மூலமாகவும் தான் அது ஏற்பட்டது.

6) ஒப்பு நோக்கு உபரி மதிப்பு (Relative Surplus-Value) - தி.கே.மித்தேராபோல்ஸ்கி

 வேலை நாளை நீட்டுவதன் மூலம், உபரி மதிப்பை அதிகரித்ததானது, தொழிலாளிகளின் எதிர்ப்பை வளர்த்தது. இது, சுரண்டலை தீவிரப் படுத்துவதற்கு மற்றொரு முறையை மேற்கொள்ளும்படி முதலாளிகளைத் தூண்டியது. இந்த வழிமுறை வேலை நாளின் மொத்த நேரத்தை அதிகப் படுத்துவதில்லை. ஆனால் அவசிய உழைப்பு நேரத்தைக் குறைக்கிறது. அதேசமயத்தில் இது உபரி உழைப்பு நேரத்தையும் அதன் காரணமாக உபரி மதிப்பையும் அதிகப்படுத்துகிறது. தொழிலாளிகளுக்கான உபயோகப் பொருள் உற்பத்தி செய்யும் பிரிவுகளில் உற்பத்தித் திறன் உயர்த்தப்படுவது, அவசிய உழைப்பு நேரத்தைக் குறைப்பதை சாத்தியமாக்குகிறது. அதே சமயத்தில் தொழிலாளிகளுடைய வாழ்க்கைச் சாதனங்களின் செலவையும் அதற்கேற்றாற் போல் உழைப்புச் சக்தியின் மதிப்பையும் குறைக்கிறது. முன்பு தொழிலாளியின் வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்ய 5 மணி நேரம் செலவு செய்யப்பட்டதென்றால் இப்போது, உதாரணமாக அந்த நோக்கத்திற்காக மூன்று மணி நேரந்தான் செலவிடப்படுகிறது. இதில் வேலை நாள் பின்வருமாறு இருக்கிறது: 

3 மணி                        7 மணி

அவசிய நேரம்                 உபரி நேரம்

வேலை நாளின் கால அளவு மாறாவிட்டாலும் சுரண்டலின் அளவு அதிகரித்து விட்டது.

அவசிய உழைப்பு நேரத்தைக் குறைப்பது, அதற்கேற்றாற் போல், உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிப்பால் உபரி உழைப்பு நேரம் உயர்வதன் விளைவாக ஏற்படுகிற உபரி மதிப்பு ஒப்பு நோக்கு உபரி மதிப்பு எனப்படுகிறது.

இவ்வாறு முதலாளிகள், சாத்தியமான அளவு அதிக உபரி மதிப்பைப் பெறுவதற்காக உற்பத்தி விஸ்தரிப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, தொழிலாளிகளைச் சுரண்டுவதைத் தீவிரப்படுத்துவது முதலிய ஒவ்வொரு சாத்தியமான வழியையும் முதலாளிகள் உபயோகிக்கிறார்கள். உபரிமதிப்பு உற்பத்திதான் முதலாளித்துவ சமுதாயத்தின் பிரதான பொருளாதார விதியாகும்.

5) முற்றான உபரி மதிப்பு (Absolute Surplus-Value = அறுதி உபரி மதிப்பு) - தி.கே.மித்தேராபோல்ஸ்கி

உபரி மதிப்பை அதிகப்படுத்துவதற்கான முதல் வழி வேலை நாள் நீட்டுவதில் இருக்கிறது. வேலை நாள் 10 மணியிலிருந்து 12 மணியாக நீட்டப்பட்டு விட்டதாக வைத்துக் கொள்வோம். 

உழைப்புச் சக்தியின் மதிப்பு மாறாததால், அவசிய உழைப்பு நேரம் மாறவில்லை. ஆனால் உபரி உழைப்பு நேரம் அதிகரித்து விட்டது.

5 மணிகள்               7 மணிகள்

அவசிய நேரம்           உபரி நேரம்

7 மணி

X  100ரூ  =  140ரூ

5 மணி

வேலை நாளை நீட்டுவதன் மூலம் கிடைக்கப் பெறுகிற உபரி மதிப்பு முற்றான உபரி மதிப்பு (அறுதி உபரி மதிப்பு), ஏனென்றால் வேலை நாள் ஒட்டு மொத்தமாக முற்றாக நீண்டதாகி விட்டது. முற்றான உபரி மதிப்பு (அறுதி உபரி மதிப்பு) அதாவது நீட்டப் பட்ட வேலைநாள் என்பது முதலாளித்துவ வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தின் குணாம்சமாக இருந்தது. ஏனென்றால் அப்போது தொழில் நுட்பம் மிக தாழ்ந்த மட்டத்திலேயே இருந்தது; தங்களுக்குச் சொந்தமான கால் நடைகளைப் பெற்றிருந்த பல விவசாயிகளும், கைத் தொழிலாளிகளும் இல்லை. அப்போது பூர்ஷுவா அரசு முதலாளிகளுக்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாகத் தொழிலாளிகளை உழைக்கும்படி நிர்ப்பந்திப்பதற்கான விசேஷ சட்டங்களை வெளியிட்டது. இதன் விளைவாகத் தொழிலாளிகளின் ஜீவிய காலம் குறைந்தது, உழைப்பாளி மக்களிடையே மரண விகிதம் உயர்ந்தது.

தொழிலாளி வர்க்கம் வளர்ந்து, பலம் பெற்றபோது குறைந்த நேரம் கொண்ட வேலை நாளுக்கான தங்களுடைய போராட்டத்தைத் தொழிலாளிகள் தீவிரப் படுத்தினார்கள். குறைந்த நேரம் கொண்ட வேலை நாளுக்கான கோரிக்கை, தொழிலாளி வர்க்க இயக்கத்தின் முதல் கோரிக்கைகளில் ஒன்றாகும். இந்தப் போராட்டம் முதலில் இங்கிலாந்தில் ஆரம்பித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் இங்கிலாந்தில் வேலை நாள் 12 மணியாகவும் 1901-இல் 10 மணியாகவும் குறைக்கப்பட்டது. குறைந்த நேரம் கொண்ட வேலை நாளுக்கான போராட்டம் இதர நாடுகளிலும் நடத்தப்பட்டது. உதாரணமாக ருஷ்யாவில் 1897-ஆம் வருட பெரும் வேலை நிறுத்தப் போராட்டங்களுக்குப்பின் வேலை நாளை 11½ மணி என்று வரையறுத்துச் சட்டம் இயற்றப்பட்டது.

பின்னர், தொழிலாளி வர்க்கம் 8 மணி நேரம் வேலை நாளைக் கோரியது. 8 மணி நேர வேலை நாளுக்கான போராட்டம், குறிப்பாக 1917-ஆம் வருட சோஷலிஸப் புரட்சி வெற்றி யடைந்ததற்குப்பின் ருஷ்யாவில் தொழிலாளி வர்க்கத்தின் இந்த கோரிக்கை அமுலாகியபின், ஆக்கம் பெற்றது. தொழிலாளி வர்க்கத்தின் நிர்ப்பந்தத்தால் பலமுதலாளித்துவ நாடுகளில் 8 மணி நேர வேலை நாள் அமுலாக்கப்பட்டது. வேலை நாள் நேரத்தைக் குறைத்ததை ஈடு செய்துகொள்வதற்கு முதலாளிகள் உழைப்பைக் கடுமையாக வேகப்படுத்தினர்.